தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைப்பெற்றன. இந்நிலையில் 46 வாக்குமையங்களில் வாக்குப்பதிவு முறையாக நடைப்பெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, மறுவாக்குப்பதிவு நடந்தால் அதற்கு தயாராகும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஈரோடுக்கு 20 VVPAT இயந்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே செய்யப்பட்டுள்ளது.
ஒப்பனை வாக்குப்பதிவு நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வாக்குகளை தேர்தல் துவங்குவதற்கு முன் நீக்கிவிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில தேர்தல் அதிகாரிகள் இதை செய்யத்தவறியதால் தவறுகள் நடந்துள்ளது. தமிழகத்தில் 46 இடங்களில் இதுபோல தவறுகள் நடந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அளித்துள்ளோம்.
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம். இந்த மையங்களில் மறுவாக்குப்பதிவு நடக்குமா என்பது குறித்து தற்போது கூறமுடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமே பரிசீலித்து, மறுவாக்குப்பதிவு நடத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும். தேர்தல் நன்னடத்தை விதிப்படி இதுவரை 156 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 114 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 42 கோடி மீதமுள்ளது. இதுவரை 2243 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.