தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100% வெளிப்படைத் தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருப்பது அவசியம் - ஜெயக்குமார்

All Political Party Meeting: கள்ள ஓட்டு போடுவதை தவிர்ப்பது, 100% வெளிப்படைத் தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருப்பது, பெண் வாக்காளர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்துவது, 'வாக்காளர் சேர்ப்பு முகாம்' நடத்த வேண்டும், ஏற்கனவே பதிவு செய்த வாக்காளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அப்டேட் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பல அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 8:39 PM IST

Updated : Oct 25, 2023, 9:08 PM IST

வெளிப்படைத் தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருப்பது அவசியம் - ஜெயக்குமார்

சென்னை:வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் படிவங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியல் 100% வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை இன்று (அக்.25) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 'கடந்த காலத்தில் 18 வயது நிரம்பியோர் வாக்காளர்களாக விண்ணப்பிக்க ஒருமுறைதான் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது மூன்று முறை வழங்கப்படுகிறது. வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான படிவங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்குமாறு கூறினோம்.

18 வயது நிரம்பியோரில் கடந்த ஆண்டில் 30% மட்டுமே சேர்த்துள்ளனர். அவர்களை முழுமையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். நவம்பர் மாதத்தில் பெயர் சேர்ப்பு முகாம் நடக்கும்போது அரசியல் கட்சிகளை மட்டுமே சார்ந்திருக்காமல், தேர்தல் ஆணையமும் வாக்காளர்களின் பெயர்களை முழுமையாக சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கோள்ள வேண்டும். குடிசை மாற்று வாரியங்களில் இருப்போருக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் முறையாக வழங்குமாறு வலியுறுத்தினோம்.

100% வெளிப்படைத் தன்மையுடன் வாக்காளர் பட்டியல்:மேலும் தேர்தல் ஆணைய வலைதளத்தில் வாக்காளர்களின் புகைப்படங்களை இணைக்க கோரினோம். ஆதார் கார்டுகளை வாக்காளர் அட்டையுடன் இணைத்ததன் மூலம் 20 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்தது, மகிழ்ச்சி. ஆனாலும், இறந்த பலரின் பெயர் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. முகவரி மாறிய பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் எனவும் நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான முகாம் நடக்கும்போது அரசியல் கட்சிகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஆணையம் சார்பில் கூறியுள்ளனர். 100% வெளிப்படைத் தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை வைத்துள்ளதாகவும்' அவர் தெரிவித்தார்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு: இவரைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வீரபாண்டியன், 'வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும், இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும் சட்டமன்றத்தில் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.

சட்டமன்றம் அங்கீகரித்த கட்சிகள் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில், அதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டும்' என கூறினார்.

விண்ணப்பங்கள் குறித்து உடனடி நடவடிக்கை தேவை:பின்னர் பேசிய தேமுதிக துணைத்தலைவர் பார்த்தசாரதி, '18 வயதான பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, மனு கொடுத்தால் அதை வாங்கி வைத்து கொள்கின்றனர். ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை தேர்தல் நேரத்தில்தான் பார்க்க முடிகிறது. எனவே, வாக்காளர் பட்டியலில் இணைக்க மனு கொடுக்கும்போதே, விண்ணப்பித்ததற்கான படிவங்களை வழங்க வேண்டும். தேர்தல் பணியில் அரசுப் பணியாளர்கள் மட்டுமின்றி, தனியார் அலுவலர்களையும் நியமனம் செய்ய வேண்டும்' என வலியுறுத்தியாக தெரிவித்துள்ளார்.

பெண் வாக்காளர்களுக்கு போதிய வசதிகள் தேவை: காங்கிரஸ் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த நவாஸ் பேசுகையில், 'வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாக்களிக்க வருவோரில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருப்பவர்கள் பெண்கள். எனவே மகளிருக்கு போதுமான வசதியை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்த வேண்டும். ஒரு வாக்காளருக்கு பல இடங்களில் வாக்குகள் இருப்பதை சரிசெய்ய கோரினோம்' என்றார்.

'வாக்காளர் சேர்ப்பு முகாம்' வேண்டும்: தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பில் பேசிய ஸ்டெல்லா, 'கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க, வாக்காளர்கள் கைரேகையை பதிவிட்டு வாக்கு செலுத்தும் நடைமுறையை கொண்டுவர வலியுறுத்தினோம். 100% வாக்குப்பதிவை எட்ட முடியாததற்கு காரணம் சில வாக்குச்சாவடிகளில் சில கட்சிக்காரர்கள் அடாவடியில் ஈடுபடுவதுதான். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரினோம்.

பள்ளிக்கூடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் நெரிசல்களை ஏற்படுவதை தவிர்க்க தனியார் கட்டடங்களையும் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்த கோரினோம். இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் 'வாக்காளர் சேர்ப்பு முகாம்' நடத்த வலியுறுத்தியதாக' கூறினார்.

புதிய வாக்காளர்கள் பட்டியலை அப்டேட் செய்க:பாஜக கராத்தே தியாகராஜன் கூறுகையில், 'பூத் அளவில் ஏஜெண்ட்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வழங்கிய பட்டியலை தேர்தல் ஆணைய வலைதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டியதோடு, அதை விரைவில் பதிவேற்ற கோரிக்கை விடுத்தோம். தேர்தல் ஆணைய நடைமுறையைப் பின்பற்றி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட எங்களது முழு ஆதரவை வழங்குவதாக' தெரிவித்தார்.

இதையும் படிங்க:"வாரிசு அரசியல், ஊழலில் ஊறித் திளைக்கும் திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும்" - வானதி சீனிவாசன்!

Last Updated : Oct 25, 2023, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details