சென்னை: வாக்காளர் சரிபார்ப்பு திட்ட பணிகள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலை கண்காணிக்க 3 அல்லது 4 மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அலுவலர் என்ற விகிதத்தில் 10 ஐஏஎஸ் அலுவலர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழக ஐஏஎஸ் அலுவலர்களுடன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
ஐஏஎஸ் அலுவலர்களுடன் சத்திய பிரதா சாகு ஆலோசனை - இந்திய தேர்தல் ஆணையம்
வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் வரைவு பட்டியலை சரிபார்க்க நியமிக்கப்பட்ட தமிழக ஐஏஎஸ் அலுவலர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, தமிழக ஐஏஎஸ் அலுவலர்கள் சி.சமயமூர்த்தி, ஜோதி நிர்மலாசாமி, எம்.விஜயகுமார், எஸ்.சிவசண்முகராஜா, டி.பி.ராஜேஷ், வி.சம்பத், எம்.கருணாகரன், எஸ்.நடராஜன், ஷன்ஜன்சிங் ஆர்.சவான், ஏ.ஞானசேகரன் ஆகியோர் நேரில் சென்று, சரிபார்ப்பு மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை கண்காணிப்பர்.
இவர்கள், சுருக்க முறை திருத்த பணிகளை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மூன்று முறையாவது பயணம் மேற்கொண்டு பார்வையிடுவர். மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளை மேற்பார்வையிட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்துவதோடு, பொதுமக்களை சந்தித்து வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் குறித்தும் ஆய்வு செய்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்புவர் என்று தெரிவிக்கப்பட்டது.