கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளின் தேவை ஒருபக்கம் இருந்தாலும், பொருளாதார பாதிப்பால் நாடு முழுவதும் பல சிக்கல்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. கரோனா தாக்கம் பொருளாதார அமைப்பை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவினால் வணிக வளாகங்கள், பெரிய கடைகள் போன்றவை செயல்பட கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், பொதுமக்கள் வெளியே வருவதற்கான கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீக்கப்படாத நிலையில், 24 மணிநேரமும் செயல்படும் பெட்ரோல் நிலையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான வருவாய் ஈட்டித்தருவது மதுமானக் கடைகள்தான். இதன் காரணமாகவே, கரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் கூட மதுபானக் கடைகளைத் திறக்க அரசு முற்பட்டது.
தமிழ்நாடு அரசின் தரவுகள்படி அரசின் வருவாய் 71 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா ஊரடங்கால் கடன் இரட்டிப்பு பெற்றுள்ளது. ஏப்ரல், மே மாதத்தின் நிலவரம்படி 16 ஆயிரம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது. கரோனா தாக்கம் இன்னும் முற்றிலும் குறையாத நிலையில், பொருளாதார ரீதியாக தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி தொகை 4,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது 600 கோடியாக உள்ளது. மேலும், ஜிஎஸ்டி தவிர்த்து, 3,500 கோடி ரூபாய் வருவாய் கடந்த ஆண்டு இருந்த நிலையில், தற்போது 1,398 கோடியாக உள்ளது. கடன் கடந்த ஆண்டு மே மாதத்தின் அடிப்படையில், 8000 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின்படி 16 ஆயிரம் கோடியாக உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பு ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள காணொலி இதன் விளைவாக தமிழ்நாடு அரசு, துறை சார்ந்த செலவுகளை குறைக்கும் வண்ணம் சில அறிவிப்புகளை மே மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, அலுவலகம் மற்றும் இதர அவசர செலவுகள் ஒட்டுமொத்தமாக 20 விழுக்காடு குறைக்கப்படும், பூங்கொத்து - சால்வை போன்றவையில் சிக்கனம், விளம்பரச் செலவுகளில் 15 விழுக்காடு வரை குறைக்கப்படும், அரசு அலுவலகங்களில் புதிதாக கம்ப்யூட்டர் வாங்க அனுமதிக்கப்படாது உள்ளிட்ட பல முடிவுகளை அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் சட்டப்பேரவை பிரதான எதிர்க்கட்சியான திமுக, கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்யவும், நிதி நெருக்கடியை மீட்க புதிய வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வருவாய் குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில், தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி வருவாய் வரி மொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக உள்ளது. இதன்படி, ஒவ்வொரு காலாண்டுக்கும் தமிழ்நாடு அரசிற்கு சராசரியாக 50 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் அரசின் தலைமைச் செயலர் தெரிவித்த தகவலின்படி, தமிழ்நாட்டிற்கு 30 ஆயிரம் கோடியாக வருவாய் உள்ளது. இதன்மூலம் அரசின் வருவாய் குறைந்து வருகின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கரோனாவிற்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு ஆகியுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, கரோனா சோதனைகளுக்கு மட்டுமே ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகியுள்ளது. இப்படி நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கிவருவது வியப்பைத் தருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசிய மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமே அரசு செலவு செய்ய வேண்டும் என அந்தக் காணொலியில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியைக் காணும்' - என்.கே.சிங்