தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சென்னை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் எனும் முந்திரி வியாபாரியை கடந்த 28 ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். அண்மையில் நடந்த சில திருட்டு சம்பவத்தில் நகை, செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்யும் நோக்கில் அவரை அடித்து துன்புறுத்தியதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.
நெய்வேலியில் கடந்த 20 ஆம் தேதி ஒரு செல்போன் பறிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் செல்வத்தை அழைத்து சென்ற நெய்வேலி காவல் ஆய்வாளர் உடல் முழுவதும் அடித்துள்ளார். இதனால் அவருக்கு பின்பகுதி , கணு கால் நரம்புகள் உள்ளிட்டவற்றில் காயம் ஏற்பட்டது.
காவல்நிலையத்தில் வைத்து அடித்தால் சாத்தான்குளம் சம்பவம் போல ஆகிவிடும் என்று கூறி முந்திரிக் காட்டில் வைத்து அடித்தும், பின்னர் ராணி & ராணி லாட்ஜில் வைத்து அடித்துள்ளனர்.
10 லட்சம் பணம் , 5 பவுன் நகையை எடுத்து வருமாறு அவரது மனைவியிடம் போன் மூலம் காவல்துறையினர் கூறியுள்ளனர். லாட்ஜில் வைத்து அடித்த பின்னர் மீண்டும் காவல் நிலையம் கொண்டு வந்து கை கால்களில் சங்கிலி பிணைத்து அடித்துள்ளனர் , இதற்கு கண்ணால் பார்த்த சாட்சி உள்ளது.
சாத்தான்குளத்தைப் போன்ற காவல்துறையினரின் திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதல் இது. பிறகு சிறைக்காவலர்கள் விருத்தாசலம் மருத்துவமனையில் செல்வத்தை அனுமதித்துள்ளனர். உள்சிகிச்சை நோயாளியாக அனுமதிக்கக் கோரினாலும் வலி நிவாரணி மட்டுமே கொடுத்து மீண்டும் காவல்நிலையம் அனுப்பியுள்ளனர்.