சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவில் பையனூர் பங்களா உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் இன்று (செப்.08) முடக்கியுள்ளனர்.
சிறை தண்டனையை அடுத்து தொடரும் ஐடி ரெய்டுகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு மீதமுள்ள மூவரும் நான்காண்டு சிறைத் தண்டனையை முடித்து வெளியே வந்தனர்.
இச்சூழலில் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ச்சியாக, 2017ஆம் ஆண்டு சசிகலா, அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு என 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் நான்காயிரத்து 430 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதையும் அலுவலர்கள் கண்டுபிடித்தனர். அதுமட்டுமல்லாமல் சுமார் 4,500 கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாமி பரிமாற்ற சட்டத்தில் வழக்குப்பதிவு
இதில் பினாமி பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வருமான வரித் துறையினர் கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக 2019ஆம் ஆண்டு 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.
அதற்கடுத்தபடியாக 300 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 65க்கும் மேற்பட்ட கணக்கில் வராத சொத்துக்களை கண்டுபிடித்து வருமான வரித் துறையினர் கடந்த ஆண்டு அவற்றை முடக்கினர். இதில் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே சசிகலா கட்டி வரும் புதிய பங்களா சொத்தையும் வருமானவரித் துறையினர் முடக்கினர்.
முடக்கப்பட்ட பையனூர் பங்களா
அதற்கடுத்தபடியாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என 2,000 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது திருப்போரூர் தாலுகாவில் உள்ள பையனூர் பங்களா,அதைச் சுற்றியுள்ள நிலம் என 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நாற்பத்தி ஒன்பது ஏக்கரில் உள்ள 12 விதமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.