சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கரோனா பாதிப்பால் பெங்களூரு விக்டோரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். நான்கு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்பு பொது வாழ்வுக்குத் திரும்பும் சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பயன்படுத்திய வாகனத்தில் அதிமுக கொடியுடன் சென்றது அதிமுகவினரை பதட்டம் அடைய செய்துள்ளது. சசிகலா மருத்துவரின் ஆலோசனையின்பேரில், பெங்களூருவில் 10 நாள்கள் ஓய்வு எடுத்த பின்பு சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிய அதிமுக நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும், சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் போஸ்டர் ஒட்டக்கூடாது என அதிமுக தலைமை அறிக்கை விட்டது.
இந்நிலையில், விரைவில் சென்னை திரும்பும் சசிகலாவால் அதிமுகவில் பல மாற்றங்கள் நடைபெறும் எனக் கூறப்படுகின்றது. இதற்கு வலு சேர்கும் விதமாக "சசிகலாதான் இன்னும் அதிமுக பொதுச்செயலாளர், அவருக்கு அதிமுக பொதுக்குழு கூட்டுவதற்கு அதிகாரம் உண்டு. ஜனநாயக முறைப்படி அதிமுக கட்சியை மீட்போம்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா வருகை குறித்துப் பேசும் அரசியல் நோக்கர்கள், சசிகலா வருகையால் அதிமுக கட்சியில் மாற்றம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதுகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி சசிகலாவை மீண்டும் அதிமுக கட்சியில் இணைத்து கொள்ள 100 விழுக்காடு வாய்ப்பு இல்லை என தெரிவித்திருக்கிறார்.
இதனால், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை பொருத்தே அதிமுகவில் மீண்டும் சசிகலா ஆதிக்கம் செலுத்துவாரா என்பதை பற்றி பேச முடியும் எனக் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுகவினர் சசிகலா வருகை குறித்து தற்போது கருத்துகள் கூறுவதை தவிர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க:'கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதிப்பதால் யாருக்கும் பலனில்லை' - பிரேமலதா விஜயகாந்த்