சென்னை: தி.நகரில் திருமணவிழா ஒன்றில் கலந்துகொண்ட வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது," ஆளுங்கட்சி செய்யக்கூடிய நன்மை, தீமைகளை சுட்டிக்காட்டுவது பத்திரிக்கையாளர்களின் கடமையாகும். அதிமுகவில் பதவிக்காக சில பேர் எனக்கு எதிராக பேசி வருகின்றனர். அதிமுகவில் நான் இணைவது தொண்டர்களின் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் அதிமுக பக்கம் இல்லை. மேலும் பொதுக்குழுவை கூட்டி அவர்களால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை.
அரசு நிர்வாகமின்மை காரணமாக கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளது, காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ளதா என சந்தேகம் எழுகின்றது. கடைமடை வரை சரியாக தூர் வாராமல் மேட்டூர் தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார். அதிமுகவை மீட்டெடுக்க நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
சாதாரண தொண்டனை கூட ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஜெயலலிதா அனுப்பினார். ஜெயலலிதா தான் பேரறிவாளன் விடுதலைக்கு முதலில் விதை போட்டவர். அஇஅதிமுகவை ஜாதி மத பேதமின்றி எம்ஜிஆர் உருவாக்கினார். ஓபிஎஸ் என்னை தொடர்பு கொண்டாரா என்பதை எப்படி நான் வெளிப்படையாக கூற முடியும். பத்திரிகையாளர்களின் வாயை அதிகாரத்தை பயன்படுத்தி மூடலாம். பொதுமக்களின் நலன் கருதி பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும். ஒரு நாட்டின் பிரதமர் நலத்திட்ட உதவிகளுக்காக எந்த மாநிலத்திற்கும் செல்லலாம்.