சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
தொடர்ந்து, தேர்தல் நேரத்திலும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது மீண்டும் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அதிமுக, அமமுக தொண்டர்களுடன் ஃபோனில் பேசி வந்த அவர், தற்போது நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
அதிமுக கொடி கட்டிய காரில், ’கழகப் பொதுச்செயலாளர் சசிகலா; என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அதிமுக பொன் விழாவின்போது எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அவர் முன்னதாகத் திறந்து வைத்தார். மேலும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் சசிகலா
இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று (அக்.26) காலை தஞ்சாவூர் புறப்பட்டார். அவருடன் பரப்புரை வாகனமும் செல்கிறது. செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். மேலும் அதிமுக நிர்வாகிகளையும் அவர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவரின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நாளை (அக்.27) தஞ்சாவூரில் நடக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொள்கிறார்.
அதன்பின் அங்கிருந்து 28ஆம் தேதி மதுரைக்குச் சென்று தனது ஆதரவாளர்களை சந்திக்கிறார். அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தொடர்ந்து மரியாதை செலுத்துகிறார். ’அதிமுகவை மீட்பேன்’ என்று சசிகலா முன்னதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில் தனது முதல்கட்ட அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ளார்.