முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சிக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. கட்சியினை மீண்டும் கைப்பற்ற சசிகலா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அண்மைக்காலமாக அவர் தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வளம் வருகிறது. இது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது அவர் சென்னை, மதுரை, நெல்லை, உளுந்தூர்பேட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் தொண்டர்கள் பலரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் - ஓபிஎஸ் கட்சியை மோசமாக நிர்வாகம் செய்து வருவதாகவும், தொண்டர்களின் கருத்துகளுக்கோ, கட்சியின் பாரம்பரியத்துக்கோ மதிப்பளிக்காமல் சுயநலத்தை முன்வைத்தே செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
"இவர்களை விடக்கூடாது. இவர்களின் அக்கிரமத்துக்கு நீங்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொறுப்பிலிருந்து நீக்கி அவமானப்படுத்துகிறார்கள். அதிமுக ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் கட்சியின் பொதுச் செயலாளர். 2022ஆம் ஆண்டில் நீங்கள் தான் முதலமைச்சர்" என உணர்ச்சிப் பொங்க பேசினர். நீங்கள் மீண்டும் கட்சி பொதுச் செயலாளராக வர வேண்டும் எனத் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.