சென்னை: தமிழ்த் திரைத் துறையில் காலத்தால் அழியாத பல பாடல்களை இயற்றி புகழ்பெற்றவர், அரசவைக் கவிஞர் புலமைப்பித்தன். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புலமைப்பித்தன் சிகிச்சைப் பலனின்றி நேற்று (செப். 8) காலமானார்.
இந்நிலையில் தற்போது புலமைப்பித்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சசிகலா ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு பொறுப்புகளை வகித்த புலமைப்பித்தன்
அதில், “பெரியவர், புலவர் புலமைப்பித்தன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். புலவர் புலமைப்பித்தன், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீது மிகுந்த பாசம்கொண்டவர். எம்ஜிஆர் காலத்தில் சட்டப்பேரவை மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும் பதவி வகித்தார்.
ஜெயலலிதா காலத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவராகவும், அதிமுகவின் அவைத் தலைவராகவும் செயலாற்றியவர். திரைப்படங்களில் தன் பாடல்கள் மூலம் திராவிடச் சிந்தனை, தமிழர்களின் வளர்ச்சி சார்ந்த கருத்துகளை, பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிய முறையில் வெளிப்படுத்தியவர்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு அவர் எழுதிய பாடல்கள் எல்லோராலும் ஈர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. புலவர் புலமைப்பித்தனின் மறைவு, யாராலும் ஈடுசெய்ய முடியாது.
அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது துணைவியாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். புலவர் புலமைப்பித்தனின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட 10 அறிவிப்புகள் என்னென்ன?