சென்னை மெரினாவில் பேரறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, "அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் மிக அருகில் நெருங்கிவிட்டோம். இடைத்தேர்தலில் போட்டியிடுவது அதிமுகவிற்கு நல்லதல்ல.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ஆரம்பம் முதலே என்னுடைய அறியுரை. அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்கிறேன். இது மீனவர்களைப் பாதிக்கும் மற்றும் காவல் துறைக்கு சவாலாக இருக்கும்.
அப்படி நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றால் அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு கருணாநிதி நினைவிடம் அருகில் நினைவுச் சின்னம் அமைக்கலாம். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகளின் நெல்லை அரசு விரைந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோல், 30 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிரிட்டுள்ளனர்.
இயற்கை சீற்றம் காரணமாக உளுந்து சேதமடைந்துள்ளது. அதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு சரி செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்காகவும், அதிமுக தொண்டர்களுக்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் வரக்கூடிய நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற முடியும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: அதிமுகவினர் பேரணியாக சென்று மரியாதை!