ஒரு வாரத்தில் விடுதலை: சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு
15:57 January 20
பெங்களூரு: ஒரு வாரத்தில் விடுதலை ஆகவுள்ள நிலையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து அவர் வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை பரிசோதித்த சிறை மருத்துவர் உமா தலைமையிலான நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு அவருக்கு காய்ச்சல், சளி காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இதனையடுத்து சசிகலா போரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியுடன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார் எனத்தெரிகிறது.
மேலும் 63 வயதான சசிகலாவுக்கு உயர் தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இருப்பதாகவும்; மருத்துவமனைக்கு வருகை தரும்போது சசிகலாவுக்கு ஆக்சிஜனை இழுக்கும் திறன் 79%மும் காய்ச்சலும் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.