சென்னை: தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தத்தை சட்டப்பேரவையிலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் நடத்தினர். சட்டப்பேரவை தொடங்கி 20 நிமிடங்களுக்குள் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததை எதிர்த்து, ஈபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். அப்பொழுது ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு தரப்பையும் அவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றினார்.
பின்னர் சட்டப்பேரவையை தொடர்ந்து சபாநாயகர் நடத்தினார். இதில் முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அருணா ஜெகதீசன் அறிக்கை போன்றவைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கையில்,"2012 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சுமுக உறவு இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.
அமெரிக்காவிலிருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மறைந்த நேரமும், மருத்துவமனையின் அறிக்கையும் முரணாக இருக்கிறது. இதனால் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியது. முதலில் இடைக்கால முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், நிர்பந்தம் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்.