அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ச்சியாக அதிமுகவின் கலைப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் தொழிநுட்ப அணி ஆகியவை அமைப்பு சாரா அணிகளாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த அணிகள் பிரதான அணிகளாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுகவின் அடிப்படை சட்ட விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக 5 ஆண்டுகாலம் இருப்பவரே அமைப்பு தேர்தலில் போட்டியிட வேண்டும் என இருந்த அடிப்படை விதியில், போட்டியிடுபவர் தேர்தலில் நிற்பதற்கு முன்பு தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு அதிமுகவின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக 5 ஆண்டு இருப்பவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குக் கூட போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கூட அதிமுகவில் இணைந்து தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாத வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.