சசிகலா நியமனம் ரத்து வழக்கை ஒத்தி வைத்து உத்தரவு - அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொது செயலாளராக வி.கே சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்குகள் தொடர்ந்தனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவிற்கு சசிகலா பதிலளிக்கவும் கடந்த முறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் நீதிபதி ஶ்ரீதேவி, விடுப்பில் இருப்பதால் வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதி தள்ளி வைத்தனர்.