சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பையனூர் பங்களா உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் நேற்று (செப்.8) முடக்கியுள்ளனர். பினாமி பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வருமான வரித் துறையினர் கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியதில், முதற்கட்டமாக 2019ஆம் ஆண்டு 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.
அடுத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 65-க்கும் மேற்பட்ட கணக்கில் வராத சொத்துக்களை கண்டுபிடித்து வருமான வரித் துறையினர் கடந்த ஆண்டு முடக்கினர். இதில் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகே சசிகலா கட்டி வரும் புதிய பங்களா சொத்தையும் வருமானவரித் துறையினர் முடக்கினர்.
பின்னர் கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என 2,000 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது திருப்போரூர் தாலுகாவில் உள்ள பையனூர் பங்களா, அதைச் சுற்றியுள்ள நிலம் என 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 49 ஏக்கரில் உள்ள 12 விதமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
இதில் இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் 22 ஏக்கர் சொத்தை சசிகலா மிரட்டி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "என்னுடைய பையனூர் பங்களாவை சசிகலா தரப்பில் இருந்து மீட்டு தரவேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். அதன் பின்னரே சசிகலா தரப்பு எப்படி என்னிடம் பங்களாவை கைப்பற்றினார்கள் என்பது குறித்து விவரமாக தெரிவிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
கோடநாடு விவகாரம்
பையனூர் பங்களா விவகாரம் தலை தூக்கிய நிலையில் கோடநாடு விவகாரமும் தலைதூக்கி வருகிறது. கோடநாட்டில் அடுத்தடுத்து கொலைகள், ஆவணங்கள் திருட்டு என்று பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கோடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் ஜோன்ஸ், ஜெயலலிதா மற்றும் சசிகலா மிக குறைந்த பணத்தைக் கொடுத்துவிட்டு தங்களை நிர்பந்தப்படுத்தி கோடநாடு எஸ்டேட் வாங்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அந்த சமயத்தில் அமைச்சர்கள் 150 குண்டர்கள் வைத்து தங்களை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கோடநாடு எஸ்டேட்டில் மீண்டும் கைப்பற்ற நீதிமன்றம் செல்லப் போவதாக தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரத்திற்கு சொத்துக்களை இழந்த மற்ற உரிமையாளர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா உள்ளிட்ட மூவரும் நான்காண்டு சிறைத் தண்டனையை முடித்து வெளியே வந்தனர். சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க ஆர்வமாக இருந்தார். மேலும் அதிமுகவை மீட்டெடுக்கப் போவதாகவும் அறிவித்த நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. அப்போது கட்சியில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். பின்னர் சசிகலா அதிமுக தொண்டர்களுடன் உரையாடும் ஆடியோ பதிவு வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நடவடிக்கையாக சசிகலா தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கினார்.
மேலும் தன்னை எதிர்த்துப் பேசிய அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மறைவையடுத்து சசிகலா நேரில் சென்று ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த சூழ்நிலை சசிகலாவுக்கு சாதகமாக இருந்த நேரத்தில் பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். தற்போது இந்த நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக உரிய பதில் அளிக்காவிட்டாலும், வருமான வரித்துறை விசாரணையில் பினாமி சொத்துக்கள் என்பது உறுதியானால் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், பினாமியாக சேர்த்த சொத்தின் மதிப்பில் 25 விழுக்காடு அபராதமாகவும் செலுத்த வேண்டும். அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவிற்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் காத்துக் கிடக்கின்றன.
இதையும் படிங்க:தொடரும் வருமானவரித்துறை ரெய்டுகள்... மீண்டும் ஆட்டம் காணும் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை!