இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் மாநிலம், நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.