தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜகோபால் சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவு!

சென்னை: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆயுள் தண்டனை கைதியான சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகிறது என்ற ஆவணங்களை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்

By

Published : Jul 15, 2019, 3:13 PM IST

Updated : Jul 15, 2019, 3:38 PM IST

2001ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஜூலை 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டது.

உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் இருந்தபடி சரணடைய அனுமதி கேட்டு ராஜகோபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த 9ஆம் தேதி சென்னை நான்காவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சாரணடைந்த அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஐகோபாலின் மகன் சரவணன், உயர் நீதிமன்றத்தில் தக்கல் செய்துள்ள மனுவில், "72 வயதாகும் எனது தந்தை ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சைகளை வழங்க உத்தரவிட வேண்டும். சர்க்கரை நோயினால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் எனது தந்தைக்கு தினமும் நான்கு முறை இன்சுலின் செலுத்த வேண்டும். "பெடல் ஒடேமா" காரணமாக இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு உதவியாளர்கள் இல்லாமல் நடக்க முடியாது. நாள்பட்ட சிறுநீரக நோயினால் கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிருமி தொற்று காரணமாக 2014 முதல் உதவியாளர்கள் இல்லாமல் தனியாக நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக தனியார் மருத்துவர்கள் வழங்கிய மருந்துகளையே எடுத்துவந்த அவர் தற்போது, அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மருத்துவர்களும் வழங்கும் மருந்துகளை உட்கொள்வதால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது. போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் எனது தந்தைக்கான சிகிச்சை சரியாக வழங்கப்படுவதில்லை.

அதனால், எனது தந்தையை விஜயா மருத்துவமனை, எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அல்லது அனைத்து மருத்துவ உபகரணங்களும், வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜகோபாலுக்கு போதுமான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகிறது, நோயாளியின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் நோயாளியின் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்படும் செலவுகளையும் மனுதாரர் தரப்பில் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ராஜகோபாலுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருகிறது என அரசு தரப்பு ஆவணங்கள் சமர்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Last Updated : Jul 15, 2019, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details