சென்னை:வங்கக்கடலில் நிலவிவரும் மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் வடதமிழ்நாடு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தப்புயல் சென்னைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ளதால் சென்னையில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளநீரை வெளியேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு தன்னார்வலர்கள், குழுக்கள் இணைந்து மீட்புப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வரலாறு காணாத புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழ்நாடு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவர்களது உடைமைகளை இழந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழலில் சென்னையின் மிகவும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழுகொள்ளளவான 24 அடியில் தற்போது 21 அடியை அடைந்துள்ளது.