சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையை நிறுவியவர் எஸ்.எஸ்.பத்ரிநாத்(83). இவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ , டாக்டர் பிசி ராய் விருது, சிவிலியன் விருது உள்படப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உயர் படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் எஸ்.எஸ்.பத்ரிநாத் தொடங்கிய 'சங்கர நேத்ராலயா மருத்துவமனை' இன்று பல கிளைகளாக வளர்ந்து பல்லாயிரக்கணக்கானோருக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. குறிப்பாகச் சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழைகளுக்குக் கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாகச் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று(நவ.21) உடல் நலக் குறைவால் எஸ்.எஸ்.பத்ரிநாத் உயிரிழந்த நிலையில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் என்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தொலைநோக்கு பார்வையுடன், கண் மருத்துவத் துறையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வு கொடுத்த சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மருத்துவர்.எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு வருத்தத்தைத் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி! என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அசாதாரண பார்வை, தன்னலமற்ற சேவை, இரக்கத்தின் உருவகமாக இருந்து கோடிக்கான ஏழை மக்களின் வாழ்வில் ஒளி எழுப்பியுள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளதோடு, அவரை இழந்து வாரும் குடும்பத்தாருக்கும் அவரை பின்பற்றுவோருக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி! எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு மருத்துவத் துறைக்கு மாபெரும் பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் மருத்துவத் துறை நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பட்டமளிப்பு விழா மேடையில் ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!