சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் (SASY) சார்பில் மனித கழிவுகளை அகற்ற பணியமர்த்தல் தடை & மறுவாழ்விற்கான சட்டம் 2013 குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
சென்னை கிறிஸ்தவ கல்லூரி, பொது நிர்வாக துறையில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் எஸ்.கல்யாணி என்பவர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் செயல் தலைவர் ரமேஷ்நாதன், "பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு 58 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஒரு உபகரணம் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் தூய்மை பணியில் ஈடுபடுவதன் காரணமாக பல்வேறு வகையான ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர். இருப்பினும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதன் காரணமாக அவர்களுக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.