ஈரோடு:மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்க, ஈரோடு மாவட்டத்திலிருந்து 60 தூய்மைப் பணியாளர்கள் பேருந்துகள் மூலம் நேற்று புறப்பட்டனர். நிவாரணப் பணிக்காகச் செல்லும் வாகனத்தை கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற உறுப்பினர் என்.ஆர்.நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தொடர் கனமழை மற்றும் பலத்த காற்றால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மழை சற்று குறைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணி மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக ஈரோடு கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பவானி உள்ளிட்ட 4 நகராட்சிகளில் இருந்து 60 தூய்மைப் பணியாளர்கள், 4 துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள், 2 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் 1 துப்புரவு அலுவலர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணி உபகரணங்களுடன் பேருந்து மூலம் புறப்பட்டனர். நிவாரணப் பணிக்காகச் செல்லும் வாகனத்தை கோபி நகர்மன்ற உறுப்பினர் என்.ஆர்.நாகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க:சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!