சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நிரந்தரப் பணியாளர்களைத் தவிர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை ஒப்பந்ததாரர் பிடித்தம் செய்தது போக, நானூறு ரூபாய்க்கும் குறைவானத் தொகை வழங்கப்படுகிறது.
இதனை உயர்த்தி வழங்கக்கோரியும், தனியார் ஒப்பந்தத்தில் விடாமல் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக பணி வழங்கக் கோரியும் மாநகராட்சி ஆணையருக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்கள் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்களை, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அனுமதிக்காமல் நுழைவு வாயிலுக்கு வெளியே நிற்க வைத்து வரிசையாக மனுக்களை அலுவலர்கள் பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.