சென்னை:துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சிவகாமி, தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம் போல் திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே, ECR பிரதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மவுலிவாக்கம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஷ்வந்த் என்பவர், பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிவகாமியின் மீது அஷ்வந்த் கார் மோதியதில், சிவகாமி நிலை தடுமாறி எதிரே உள்ள சாலையில் விழுந்தார். அப்போது அடையாளம் தெரியாத கனரக லாரி ஒன்று, சிவகாமியின் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிவகாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவான்மியூர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.