தமிழ்நாட்டில் டெங்கு நோய் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் செல்வகுமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், டெங்கு நோயை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டெங்கு நோயை பரப்பும் கொசு, புழுக்களை உண்ணக்கூடிய மீன்களை ஏரி குளங்களில் வளர்ப்பதாகவும், வீடுகள், தெருக்களில் புகைபோட்டு கொசுக்கள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு பரவும் பகுதிகளை ஆய்வு செய்ய வேலூர், கடலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல பூச்சியியல் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு நோய் பரவும் இடங்களை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.