46th Book Fair in Chennai:சென்னை: இலக்கிய உலகில் நன்கு பரிட்சயமான ஒரு பதிப்பகம் சால்ட் பதிப்பகம் (Salt Publishing). கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக 40-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை இந்த பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது. சாகித்திய அகாதமியின் யுவ புரஷ்கார் விருது பெற்ற 'மரநாய்' என்ற கவிதைத் தொகுப்பு இவர்களின் பதிப்பில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிரபலமான ஒரு பதிப்பகத்திற்கு, சென்னை புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு, அரங்கு ஒதுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பபாசியில் ஏறத்தாழ 500 உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், இதில் பலர் இரண்டு, மூன்று பெயர்களில் உறுப்பினராக உள்ளதாகவும் கூறுகின்றனர். இவர்களே இரண்டு, மூன்று பெயர்களில் அரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இரண்டு, மூன்று பெயர்களில் அரங்குகள் எடுத்துக்கொண்டாலும், ஒரே தலைப்பில் உள்ள புத்தகங்களே அனைத்து அரங்குகளிலும் இவர்களால் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அரங்குகள் ஒதுக்குவதில் எந்த விதமான ஜனநாயக மரபையும் பபாசி அமைப்பினர் பின்பற்றவில்லை என்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உதாரணமாக, மேற்குறிப்பிட்ட சால்ட் பதிப்பகத்தின் உரிமையாளர் எழுத்தாளர் நரன், கடந்த 2022 டிசம்பர் 23ஆம் தேதியே அரங்கு ஒதுக்கக் கோரி, பபாசி அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அரங்கு ஒதுக்க லஞ்சமா?: அப்போது 26ஆம் தேதிக்குப் பிறகு தான் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் 26ஆம் தேதி சென்ற நரனை, பல காரணங்கள் கூறி பபாசி நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. அதன்பின்னும் பலமுறை நரன் படையெடுத்துள்ளார். இதனிடையே நிர்வாகத்தோடு தொடர்புடைய ஒரு நபர், நரனை அணுகி, இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை அளித்து அரங்கு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த நரன், தான் அலைக்கழிக்கப்பட்ட கோபத்தில் புத்தகக் கண்காட்சிக்கு வெளியே நடைபாதையில் தன்னுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்து விற்பனை செய்துள்ளார். இது, இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளும் கட்சி தொடர்புடைய யாரேனும் சிபாரிசு செய்தால் அரங்கு ஒதுக்கப்படலாம் என்றும் நரனுக்கு சிலர் அறிவுறுத்தி உள்ளனர்.
அதில் நாட்டமில்லாத நரன் நடைபாதையில் கடை விரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். தற்போது, அங்கு சர்வதேச புத்தகக் காட்சியை தமிழ்நாடு அரசு நடத்தி வருவதால், தற்காலிகமாக நடைபாதை கடைக்கு விடுமுறை அளித்துள்ளார், நரன். சர்வதேச புத்தகக் காட்சி முடிந்தவுடன் மீண்டும் நடைபாதையிலேயே கடை விரிக்கப் போவதாக கூறி வருகிறார். 'நாங்கள் அப்படித்தான். எங்களை யாரும் எதுவும் கேள்வி கேட்க முடியாது' என்ற வகையில் பபாசி நிர்வாகம் நடந்து கொள்வதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கின்றனர்.