தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு; நாளை அண்ணாமலை ஆஜராக உத்தரவு!

Annamalai appear to court for defamation case: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை (அக்.5) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Annamalai appear to court for defamation case
அவதூறு வழக்கில் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 1:57 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். மேலும், திமுக தலைவர்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அப்போது அவர் சுமத்தினார்.

இதையடுத்து, அண்ணாமலைக்கு திமுக தரப்பிலிருந்து பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் திமுக எம்பியும், அதன் மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது.

அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். திமுகவினர் ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாகவும் பொய்யாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொழில்துறை அமைச்சராக இருக்கும் நானும், தனது மகன் டி.ஆர்.பி.ராஜாவும் மட்டுமே பொது வாழ்வில் உள்ளோம். மற்றபடி தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் யாரும் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஆனால், நாங்கள் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலை கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்கள் பங்குதாரராகவும் இல்லை, எந்த தொடர்பும் இல்லை. இப்படி பொய்யான குற்றச்சாட்டைக் கூறி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இது தவிர அவதூறுச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என பாஐக தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜூலை 14ஆம் தேதி நேரில் ஆஜரான அண்ணாமலை, தான் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும், மக்களிடம் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சொத்துப் பட்டியல் வெளியிட்டதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அரசியல் நடைபயணம் காரணமாக அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நாளை (அக்.5) அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இணைய சேவை இயங்காததால் ஸ்தம்பித்த சென்னை விமான நிலையம்; 20 விமானங்கள் 2 மணி நேரம் தாமதம்!

ABOUT THE AUTHOR

...view details