அனைத்து சாதியினரும் முன்னேற வேண்டும் என்பதே 'மனித நேயம் அறக்கட்டளை' நோக்கம்: சைதை துரைசாமி சென்னை: தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர்களுடன் ஆளுநரின் எண்ணித் துணிக கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காந்தியவாதி தமிழருவி மணியன், அமர் சேவா சங்கம் உள்ளிட்ட 10 சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் பயிற்சி நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அப்போது மேடையில் பேசிய முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமி, "மனிதநேய இலவச ஐஏஎஸ் பயிற்சி அறக்கட்டளை 18 ஆண்டுகளாக இலவச கல்விப்பணியைச் செய்து வருகிறது. இது வரையில் 3671 பேர் இந்திய ஆட்சி பணித் துறையிலும், தமிழ்நாட்டின் அனைத்து நிலைப் பணிகளிலும் பதவி பெற்று, பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
மனித நேயம் என்பது சாதிகளை மதங்களைக் கடந்து சக மனிதனை உறவாக எண்ணி முகம் தெரியாத மனிதனுக்கு உதவி செய்வது. தேவைப்படுவோரின் தேவை அறிந்து தேடி பொய் உதவிச் செய்வது. அவர் பெயரில் தான் இந்த மனித நேயம் இருக்கிறது. மனித நேயம் கிராமப்புற மாணவர்களையும், பட்டியலின, விளிம்புநிலை மக்கள், கூலி விவசாயிகள் என பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து உதவிச் செய்வது தான் மனித நேயத்தின் நோக்கம்.
அந்த வகையில், 100 பேருக்கு அனைத்தும் கொடுத்து ஆரம்பித்த மனித நேயம், ஆண்டுக்கு 20 ஆயிரம் நபர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம். ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் படித்து போட்டித் தேர்வுகளில் இன்றும் கலந்து கொண்டு இருக்கின்றனர். தொலைக்காட்சியில் வீட்டிலிருந்தே படிக்கலாம் என்ற முறையை மனித நேயம் அறிமுகம் செய்தது. கரோனா காலத்திற்குப் பின்னர் இணையதளம் மூலம் ஆண்டிற்கு 40 ஆயிரம் பேர் படிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் இந்திய ஆட்டுப்பணிக்குச் செல்லும் மாணவர்களை அழைத்துப் பேசி கலந்துரையாடுவது அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும். நிர்வாகத்தில் நேர்மையாக இருக்க வேண்டும். மனித நேயத்தில் படித்த செங்கோட்டையன் ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வருகின்றார். டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் சி.பி.சக்கரவர்த்தி மனித நேயத்தில் படித்தவர். மனித நேயம் ஒரு பைசா செலவில்லாமல் நேர்மையானவர்களை உருவாக்கி உள்ளது.
பொது வாழ்க்கையில் நேர்மையைத் தூய்மையை கடைப்பிடித்து ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சட்டமன்ற, மேயராக இருந்தப் போதும் சுத்தமாக வாழ்ந்து வருகின்றேன். ஐஏஎஸ் பயிற்சி அளித்ததன் மூலம் 176 ஜாதிகளிலிருந்து போட்டியாளர்களை வெற்றி பெற வைத்திருக்கிறோம். அனைத்து சாதியினரையும் வெற்றி பெற வைப்போம். ஏழை எளியவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் உயர்ந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும், இதுவே இதன் நோக்கமாகும்" என்றார்.
இதையும் படிங்க: திருப்பூரில் தேன் பதப்படுத்தும் மையம்.. தூத்துக்குடியில் பனை ஓலை தொழிற்கூடம்.. கதர் மற்றும் கிராமத் தொழில் துறை புதிய அறிவிப்புகள்!