சென்னை: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அந்த உற்சவத்தில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, தகரத்தில் ஆன தற்காலிகப் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
மின் விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த வயர்கள் அறுந்து தகரத்தின் மீது பட்டதால், வரிசையில் நின்றிருந்த தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ராணி, பச்சையம்மாள், முருகன், திருக்கழுக்குன்றம் ரவி உள்ளிட்ட 6 பேர் பரிதபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில், 37 பேர் படுகாயமடைந்து செஞ்சி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, விழாவுக்கு ஒலி ஒளி ஏற்பாடு செய்திருந்த ராஜா மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது வளத்தி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.