சென்னை:சென்னை விமான நிலையத்தில் மிக்ஜாம் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் சி.வி. தீபக் தலைமையில் நேற்று (டிச.03) அவசர ஆலோசனைக் கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கும் வரையில், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர், மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து, சகஜநிலை ஏற்படும் வரையில் தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
அதோடு சென்னை விமான நிலையத்தில், ஓடுபாதை பகுதியில் இருந்து மழை நீர் வெளியேறும் கால்வாயை, தொடர்ந்து கண்காணித்து, நீர் தேங்காதபடி, வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பணிகளுக்கு கூடுதல் ஊழியர்களை, பணியில் அமர்த்துவதோடு, கால்வாயில் அடைப்பு ஏதாவது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு தேவையான உபகரணங்களையும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
விமானம் பாதுகாப்பு:மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கும் போது, சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அந்தந்த விமான நிறுவனங்கள், தங்களுடைய விமானங்களை புயல் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்து கொள்வதற்கு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயல் பாதிப்பு இருக்கும் நேரங்களில், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மட்டுமின்றி, விமான நிலையத்திற்குள் ஓடக்கூடிய பிக்கப் வாகனங்கள், பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு விமானத்தில் பொருத்தப்படும் லேடர் ஏணிகள் உட்பட எந்த ஒரு வாகனமும், விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இயக்குவதற்கு அனுமதி கிடையாது.
விமானங்கள் ரத்து:மேலும் புயல் சீற்றம் தொடங்கியதிலிருந்து, புயல் முழுமையாக கரையைக் கடந்து, சகஜ நிலை திரும்பும் வரையில், விமான நிலையத்தில் எந்த ஒரு விமானமும் இயக்கப்பட மாட்டாது. அந்த நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் தங்கி இருக்கும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட, சென்னை விமான நிலையத்தை சார்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும், தேவையான உணவு, குடிநீர் வசதிகளை முன்னதாகவே செய்து வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதோடு பயணிகள் தங்குவதற்கு கூடுதல் இடவசதி ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. மின் தடைகள் ஏற்பட்டால், இந்த நேரத்தில் அவசரத் தேவைக்கு தேவையான, ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்கள் போன்றவைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.