தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு உலக அளவில் பெயர் பெற்றுள்ளது - ஆர்.பி.உதயகுமார்
சென்னை: கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் தொழில் நிறுவனங்களிடம் தமிழ்நாடு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்புக்கு இடையே தொழில் நுட்ப பயன்பாட்டை அதிகரிப்பது, பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது தொடர்பாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) சார்பில் 'டிகோ' எனும் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "இ-சேவை, தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு உலக அளவில் பெயர் பெற்றுள்ளது.
கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் தொழில் நிறுவனங்களிடம் தமிழ்நாடு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
அண்மையில், தமிழ்நாடு பிளாக் செயின் கொள்கை, செயற்கை நுண்ணறிவு கொள்கை, இணைய பாதுகாப்பு கொள்கை, புத்தாக்க தொழில் கொள்கை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை ஏற்பதுடன் அவை பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மருத்துவம், கல்வி - வேளாண்மையில் முன்னேற்றம் பெற சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் மேகம் எனும் பெயரில் மேகக் கணிமை தொழில்நுட்பத்தின் உதவியுடன் இ-சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் இதற்கு மிக முக்கிய காரணம். தற்சார்பு இந்தியா திட்டம் பிரதமர் மோடியின் மட்டுமல்லாமல் முதலமைச்சர் எடப்பாடியின் கனவுத் திட்டம். தற்சார்பு என்பது மற்ற நாடுகளிடம் இருந்து விலகி தனித்து இருப்பது அல்ல, எல்லா தொழில்நுட்பங்களிலும் தன்னிறைவுடன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தென்னிந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ஜோனாத்தன் ஜட்கா, பிக்கி தமிழ்நாடு பிரிவு தலைவர் கவிதா தத், பிக்கி தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன் வெங்கட்ராமன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.