சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்று (மே 24) ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான சி.வைத்தியநாதனை பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாளை (மே 25) முதல் நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் பிறந்த நீதிபதி வைத்தியநாதன், பள்ளி மற்றும் சட்டப் படிப்பை சென்னையில் முடித்துள்ளார்.
1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய வைத்தியநாதன், 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனிடையே, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா இன்று ஓய்வு பெறுவதை அடுத்து தற்காலிகமாக தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றதாக பொய் விளம்பரம்: தனியார் பள்ளிக்கு எதிராக வழக்கு!