சென்னை:தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான மசோதா நிறைவேற்றி ஆளுநரிடம் நிலுவையில் உள்ள நிலையில், இ-கேமிங் பெடரேஷன் அமைப்பினர் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ரம்மியும் போக்கரும் சூதாட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
இணைய வழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த அவசர சட்டம் நவம்பர் 27ஆம் தேதியுடன் காலாவதியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இணைய வழி சூதாட்டங்களைத் தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், ஆளுநர் மாளிகையில் கேட்கப்பட்ட விளக்கங்கள் குறித்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும், அப்பொழுது பேசிய அவர் , சட்ட மசோதாவில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாகவும், அதில் அவருக்குள்ள விளக்கங்களை தெளிவுபடுத்திக் கொண்டு அனுமதி அளிப்பதாக கூறியதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி இ-கேமிங் பெடரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஷமீர் பாட் (sameer Barde) உள்ளிட்டவர்கள் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து இ-கேமிங் விளையாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில் ’ஆன்லைன் ரம்மி மற்றும் போகர் விளையாட்டுகள் திறன் சார்ந்த விளையாட்டுகள் எனவும்; இதனை தமிழகத்தில் தடை செய்ய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.