சென்னை:பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ ஆர்வலராக இருந்து வருகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு தகவல்களை பெற்று தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா சொத்துக்கள் குறித்து பல்வேறு ஆர்டிஐ மனுக்கள் மூலம் தகவல் பெற்று பல உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் நரசிம்மமூர்த்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி ஏற்றதிலிருந்து தற்போது வரை எவ்வளவு முறை விமான பயணம் மேற்கொண்டுள்ளார்? - அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது அவரோடு எத்தனை பேர் பயணம் மேற்கொள்கிறார்கள்? - விமான பயணத்திற்கான காரணம் மற்றும் செலவு உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி மனு அளித்தும், 30 நாட்களில் பதில் கிடைக்காததால், முதல் மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார். அதற்கும் 30 நாட்கள் ஆகியும் பதிலளிக்காததால், இன்று(ஜன.23) இரண்டாவது முறையாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நரசிம்மமூர்த்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நரசிம்மமூர்த்தி, "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லியில் சொகுசு பங்களா கட்டுவதால் அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆளுநர் ரவி தனிப்பட்ட விவகாரங்களுக்காக அரசுப் பணத்தில் விமான பயணம் மேற்கொள்கிறாரா? என்பது குறித்து தெரிந்து கொள்ள விமான பயணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டும் பதில் அளிக்கவில்லை.