தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மீனாகுமாரியின் பதவிக்காலம், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிந்தது. அதன்பின், ஆணைய உறுப்பினராக இருந்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், பொறுப்பு தலைவராக கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய சட்டப்படி, முதலமைச்சர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு, மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க வேண்டும்.
இதுசம்பந்தமாக விவாதிக்க கடந்த வாரம் நடந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். தகுதியானவரை இப்பதவியில் நியமிக்கவேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் அரசை வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டிருந்தார்.
இவர் மூன்று ஆண்டுகள் வரை இப்பதவியில் நீடிப்பார் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு இதையும் படிங்க:சர்வதேச மனித உரிமைகள் தினம்: சமத்துவ உலகை கட்டியெழுப்புவோம்!