சென்னை: கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் வரும் நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த உத்தரவிட்டதுடன், அதற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், உரிய அனுமதி வழங்கவில்லை என காவல் துறைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (நவ.2) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை என்றும், அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையைக்காட்டி தமிழ்நாடு அரசு தப்பிக்கப் பார்ப்பதாகவும், வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிட்டார். அனைத்து தரப்பு மக்களையும் காப்பதுதான் அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார். அமைதியான ஊர்வலத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், அது ஜனநாயகம் உரிமை என்றும் உறுதிபடத்தெரிவித்தார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, தமிழ்நாடு அமைதிப்பூங்கா என சொல்லிவிட்டு, பேரணி அனுமதி கேட்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரச்னை என்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
மேலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு மற்ற இடங்களில் ஏன் வழங்கவில்லை என காவல்துறை தரப்பிற்கு கேள்விஎழுப்பினார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைக்கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.