சென்னை:காமராஜரின் 48ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே வழி காட்டிய மகத்தான தலைவர், காமராஜர். புதிய புரட்சிகரமான இந்தியாவை ஜனநாயக இந்தியாவை, கட்டமைக்க தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட மாமனிதர் காமராஜர். இவர்களின் நினைவு நாளில், சனாதன அரசியலை தமிழ்நாட்டில் ஒரு நாளும் நுழையவிடமாட்டோம் என விசிக உறுதி ஏற்கிறது.
பயங்கரவாத அணுகுமுறை அரசியலை கொண்ட இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். அது கலாசார இயக்கம் என்ற போர்வையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சாகா என்கிற பெயரில் ஆயுதப்பயிற்சி வழங்குகிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்வதைவிட, வன்முறையைத்தூண்டி வருகிறது. இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல், இந்த ஆபத்தில் இருந்து தமிழ்நாடு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், இப்போது தமிழ்நாட்டை குறிவைத்துவிட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் நடத்த இருந்த பேரணி நடத்துவதாக அறிவித்த அன்று ஜனநாயக சக்திகள் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தோம். ஆனால், காவல் துறை பொத்தாம்பொதுவாக யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூறியது. வரும் 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி, திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். இந்த மண் காமராஜர் போன்றவர்களால், பண்படுத்தப்பட்ட மண், இந்த மண்ணில் சனாதன அரசியலுக்கு இடமில்லை என்பதை உணர்த்த இந்த அறப்போர் நடைபெறும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும்.
நேரு ஒரு ஜனநாயக சக்தி. மனிதநேயம் மிக்கவர், அவரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைத்தால், அது எவ்வளவு ஆபத்தான இயக்கம் எனப்புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரது வாயால் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வளர்வது ஆபத்து, அதனால் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் எனக்கூறி, அந்த இயக்கத்திற்குத் தடை விதித்தார்.