தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டவருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு - மனித உரிமைகள் ஆணையம்

பொய் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டவருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

பொய் வழக்கில் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டவருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு
பொய் வழக்கில் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டவருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு

By

Published : Oct 22, 2022, 2:10 PM IST

சென்னை: ஈரோட்டை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஈரோட்டிலிருந்து திருப்பூர் சென்றுள்ளார். பெருமாநல்லூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவரை, பெருமாநல்லூர் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் சோமநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் கென்னடி ஆகியோர் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காவல் நிலையம் அழைத்து சென்று துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் முருகன் புகார் மனு தாக்கல் செய்தார்.

அதில், திருடப்பட்ட நகைகள் எங்கே என கேட்டு, காவல் நிலையத்தில் வைத்து தன்னை தாக்கியதாகவும், ஈரோட்டில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் தனது மனைவி மற்றும் சகோதரியை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், வீட்டையும் சூறையாடியதாக குற்றம் சாட்டினார்.

இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தவறான குற்றச்சாட்டில் முருகனை கைது செய்து துன்புறுத்தியது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 8 வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொகையை பெருமாநல்லூர் அப்போதைய காவல் ஆய்வாளர் சோமநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் கென்னடியிடம் இருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் வசூலிக்கவும் மனித உரிமைகள் ஆணையம், அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க:'மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு அரசு கூறவில்லை' - சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details