சென்னை:அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தானே பொதுக்குழுவை கூட்டி, தன்னையே தலைமையாக தேர்ந்தெடுத்து கொண்டு பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். “பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா. நடக்காது ஸ்டாலின் அவர்களே” என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார்.
அவர்களின் கட்சியில் வான(க)ரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது, திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல. அந்தக் கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தி.மு.க.வை எதிர்த்துதான் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.
நீதிக்கு எதிரானது அநீதி. நியாயத்திற்கு எதிரானது அநியாயம். யோக்கியனுக்கு எதிரானவன் அயோக்கியன். அதுபோலத்தான் தி.மு.க.வுக்கு எதிரான இயக்கம் அ.தி.மு.க!. தி.மு.க. என்பது திராவிடக் கொள்கைகளை நிலைநிறுத்துகிற இயக்கம். அந்தத் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருப்பதால் அது 'அ'.தி.மு.க. என்று அப்போதே சொன்னவர் கருணாநிதி. இப்போதும் அதைத்தான் பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு? பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்?
பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார்; புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார். பழைய கூவத்தூர் பழனிசாமி சசிகலாவின் கால்களை நோக்கித் தவழ்ந்தார்; புது வானகரப் பழனிசாமி, தரையில் தவழ்ந்து - கரன்சிகளைக் கொட்டிக் கொல்லைப்புறமாக நுழைந்துப் பெற்ற பதவியால் கொள்ளையடித்த பணத்தை, தனக்குத் தானே முடிசூட்டிக்கொள்ள வாரி இறைக்கிறார்.
“இதில் நடக்காது ஸ்டாலின் அவர்களே” என்று வெற்று வீராப்பு வசனம் வேறு! நடக்காது என்கிறீர்களே, நீங்கள் எப்போது நடந்தீர்கள் பழனிசாமி? கீழே குனிந்து, மேஜைக்கடியில் கால்களைத் தேடி, தரையில் தவழ்ந்து, நெடுஞ்சாண்க்கிடையாக சரணாகதி அடைந்து பதவியைப் பெற்றவர் என்பதுதானே உங்கள் வரலாறு!