சென்னை:தமிழ்நாட்டில் அண்ணா, காமராஜர், பெரியார் ஆகியோர்களின் பெயர்களை மறைக்க திட்டமிட்டு சதி நடப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், வில்சன், என்.ஆர். இளங்கோ ஆகியோர்களுடன் சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சனை சந்தித்து மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி கூறுகையில், “அண்ணா சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை ஆகியவற்றுக்கு எப்படி பெயர் வைக்கப்பட்டது என்பது வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய இரண்டு சாலைகளுக்கும் திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
1979ஆம் ஆண்டு பூவிருந்தவல்லி சாலைக்குப் பெரியார் சாலை என எம்ஜிஆர் பெயர் வைத்தார். சில தினங்களுக்கு முன்பு எல்லோரும் அதிர்ச்சியடையும் வகையில் கிராண்ட் வெஸ்டன் டிரங்க், நார்த்தன் டிரங்க் ரோடு, சதன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே மாற்றபட்ட பெயர்களை மீண்டும் வைக்ககோரி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியபடி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.