சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்குவதற்கு டிக்கெட் விற்பனை துவங்கியவுடன் வாலிபர்கள் இரவு பகலாக காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். கிரிக்கெட் மீதான அதீத மோகத்தின் காரணமாக டிக்கெட்டின் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலையில் சிலர் விற்பனை செய்தாலும் வாங்கிச் செல்லும் அளவிற்கு ஐபிஎல் டிக்கெட் விற்பனை கள்ளச்சந்தையில் நடைபெற்று வருகிறது.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு ஐபிஎல் விளையாட்டின் போதும் டிக்கெட் விற்பனை துவங்கியவுடன் பல பேர் கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிப்பதற்காக, பலரிடம் பணம் கொடுத்து டிக்கெட்களை வாங்கி மோசடி நபர்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் தொடர்ந்து கண்காணித்து கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்பவர்களை செய்து பணம் மற்றும் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து வருகின்றனர். காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக சமூக வலைதளத்தில் ஐபிஎல் டிக்கெட் புகைப்படங்களை பதிவிட்டு, விற்பனைக்கு இருப்பதாக பலரும் பதிவுகளை வெளியிடுகின்றனர். அதன் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு அதிக விலையானாலும் பணம் கொடுத்து வாங்கிச் செல்லும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அருண் என்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடிய மே 6ஆம் தேதிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகளை, இன்ஸ்டாகிராம் ஐபிஎல் டிக்கெட் 2023 என்ற பக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக அறிந்து அணுகியுள்ளார். வினோத் யாதவ் என்பவரிடம் 20 டிக்கெட்டுகள் வேண்டும் என கூறி ஆன்லைன் கால் மூலமாக பேசி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை தவணை முறையில் அனுப்பியுள்ளார்.