சென்னை ஐஐடி மாணவர்கள் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்து உள்ளனர். இதனை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு திட்டத்தை வடிவமைத்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், 8 ஐஐடி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள 5G நெட்வொர்க் சேவையை மத்திய அமைச்சர் சோதனை செய்தார். ஐஐடி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையத்தையும் பார்வையிட்டார்.
அடுத்த தலைமுறைக்கான அதிவேக போக்குவரத்து மாற்றத்திற்கு சென்னை ஐஐடி மாணவர்கள் 'ஹைப்பர் லூப்' திட்ட வடிவமைப்பை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, "'ஹைப்பர் லூப்', 5 ஜி தொழில்நுட்பம் கண்டுபிடித்த ஐஐடி குழுவினருக்கு வாழ்த்துகள். 'ஹைப்பர் லூப்' திட்டத்துக்கு, மத்திய ரயில்வே
அமைச்சகம் முழு ஆதரவு அளிக்கிறது. இத்திட்ட மேம்பாடுக்காக, சென்னை ஐஐடி விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, 8.5 கோடி ரூபாய் நிதியை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளது.
வணிக ரீதியாக, 'ஹைப்பர் லூப்' ரயில் திட்டம், 2030ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மேலும் ஹைபர்லூப் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கு தேவையான நிதி உதவியும் ரயில்வே துறை வழங்கும். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை. திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில், எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில், ஒதுக்கப்பட்ட நிதியை விட, தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட 5 நிலையங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ. 746 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில், தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு, சராசரியாக 830 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் 2014-22ஆம் ஆண்டில், சராசரியாக 2ஆயிரத்து 500 கோடி ரூபாயும், நடப்பாண்டு 3ஆயிரத்து 861 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யானைகள் இறப்பைத் தவிர்க்க, புதிய முயற்சியை ரயில்வே துறை மேற்கொள்ள உள்ளது. ரயில் வழித்தடங்களில், யானைகள் தடையின்றி கடக்க ஏதுவாக, சுரங்கப்பாதை ஏற்படுத்தப்படும்.