சென்னை:சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்துக்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் கல்வியாண்டில் அரசு தொடங்கும். இக்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
அம்பத்தூரில் திறன் பயிற்சி மையம்:இத்திட்டத்தில் 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் ரூ.2,783 கோடி ரூபாய் மதிப்பில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும். பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்கும் வகையில், ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் இயந்திர மின்னணுவியல், இணைய வழிச் செயல்பாடு, அதி நவீன வாகன தொழில்நுட்பம், உயர்தர வெல்டிங், துல்லியப் பொறியியல் போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி அளிக்கப்படும்.
நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.10 கோடி: மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக 'நான் முதல்வன்' என்ற தொலைநோக்கு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மொத்தம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 12,582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.