தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு! - chennai news

Tamil Nadu Police Anti Terrorist department: தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து ரூ.60.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 7:52 PM IST

சென்னை: கோவையில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் காரில் இருந்த சிலிண்டா் வெடித்த சம்பவத்தில், ஜமேஷா முபீன் என்பவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன் என்பவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். அதன்படி, அப்பிரிவை உருவாக்கும் பணியில் தமிழ்நாடு காவல்துறை உயா் அதிகாரிகள் ஈடுபட்டனா்.

முதல் கட்டமாக, இந்தியாவில் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல்பாட்டில் உள்ள ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு காவல் துறை உயரதிகாரிகள் சென்று, அந்தப் பிரிவு செயல்படும் விதம், அவா்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், அந்தப் பிரிவில் உள்ள காவலா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, தேவையான கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த தகவல்களைச் சேகரித்தனா்.

பின்னா், இந்த சிறப்புப் பிரிவுக்கான ஒரு வரைவுத் திட்டத்தை தயாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கினா். அந்தத் திட்டத்தில், ஒரு பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி, 18 வயதில் இருந்து 22 வயதுடைய திறமையான, துணிச்சல் மிக்க இளைஞா்களைக் காவல்துறையில் இருந்து தோ்வு செய்வது, அவா்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிப்பது, முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் தீவிரவாத தடுப்புப் பிரிவைத் தொடங்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவைத் தொடங்குவதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ. அமுதா உத்தரவிட்டாா். இதற்காக ரூ.60.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கு காவல் துறையிலிருந்து 190 பேரை தோ்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், அமைச்சுப் பணியாளா் இடங்களையும் புதிதாக உருவாக்க உத்தரவிட்டுள்ளாா்.

புதிதாக உருவாக்கப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவானது டிஐஜி தலைமையில் செயல்படும். இப்பிரிவில் 4 காவல் கண்காணிப்பாளா்கள், 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 13 துணைக் கண்காணிப்பாளா்கள், 31 காவல் ஆய்வாளா்கள், 61 உதவி ஆய்வாளா்கள், 12 தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளா்கள், 130 தலைமைக் காவலா்கள், 93 காவலா்கள், 33 காவல் துறை ஓட்டுநா்கள் ஆகியோா் பணியாற்ற உள்ளனா்.

இதையும் படிங்க: ஆவடி துணை ஆணையர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் வெளியிட்ட வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details