தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 மாதங்களில் மட்டும் ரூ.57 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே தகவல்! - மதுரைக்கோட்டம்

Southern Railway: 2023-2024 நிதி ஆண்டில் ஏப்ரல்0-1ஆம் தேதி முதல் அக்டோபர்-15 ஆம் தேதி வரை, தெற்கு ரயில்வே சாா்பில் ரயில்களில் முறையற்ற பயணம் உள்ளிட்ட 10.39 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57.48 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாத் தகவல் தெரிவித்துள்ளது.

அபராதம் குறித்து தெற்கு ரயில்வே தகவல்
அபராதம் குறித்து தெற்கு ரயில்வே தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:52 PM IST

சென்னை: இந்தியாவில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதில், தினமும் சுமார் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தெற்கு ரயில்வே துறையின் கீழ் சென்னை கோட்டம் சாா்பில், திருவனந்தபுரம் கோட்டம், பாலக்காடு கோட்டம், சேலம் கோட்டம், மதுரை கோட்டம், திருச்சி கோட்டம் ஆகியவை இயங்கி வருகின்றன.

ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கிவரும் அனைத்து ரயில் நிலையங்களிலும் சரியான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவா்கள், ரயில்வே விதிகளை மீறுபவா்கள் ஆகியோரை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், பெரம்பூா், ஈரோடு, கோவை சந்திப்பு, எா்ணாகுளம் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களில் தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் பி.டிலிப், சி.ஏ.சிவகுமார், துணை தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் ஜி.ஜோதி ஆகியோர் தலைமையில், 31 பயணச்சீட்டு பரிசோதகா்களை கொண்ட தெற்கு ரயில்வே தலைமையகப் பறக்கும் படையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மேலும் இந்த சோதனையில், அதிகப்படியாக தலைமை பயணச்சீட்டு பரிசோதகா் பி.திலீப் 338 வழக்குகள் பதிவு செய்து 2.19 லட்சம் ரூபாய் அபராதத்தொகையை வசூலித்துள்ளாா். இரண்டாவதாக தலைமை பயணச்சீட்டு பரிசோதகா் சி.ஏ. சிவக்குமாா் 269 வழக்குகள் பதிவு செய்து ரூ.1.86 லட்சமும், மூன்றாவதாக துணை தலைமை பயணச்சீட்டு பரிசோதகா் ஜி. ஜோதி 209 வழக்குகள் பதிவு செய்து ரூ. 1.36 லட்சமும் அபராதம் வசூலித்துள்ளனா் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

6 மாதங்களில் அதிகரித்த ரயில் அபராதங்கள்:மேலும் இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை தெற்கு ரயில்வே சாா்பில் ரயில்களில் சரியான பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக லக்கேஜ் எடுத்துச் செல்வது என மொத்தமாக 10.39 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 57.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் இத்துடன் சென்னை கோட்டம் சாா்பில் ரூபாய் 21.92 கோடி அபராதமும் மேலும் திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் ரூபாய் 8.72 கோடியும், பாலக்காடு கோட்டம் சார்பில் ரூபாய் 8.32 கோடியும், சேலம் கோட்டம் சார்பில் ரூபாய் 8.15 கோடியும், மதுரை கோட்டம் சார்பில் ரூபாய் 5.41 கோடியும், திருச்சி கோட்டம் சார்பில் ரூபாய் 4.90 கோடி வரையில் அபராதம் வசூலித்துள்ளன.

இதற்கு முன்னதாக, சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் 539 பயணச்சீட்டு பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயணச்சீட்டு இல்லாமலும், முறையற்ற பயணச்சீட்டு மூலமும் பயணித்த 4,404 பேரிடமிருந்து ரூபாய் 20.19 லட்சம் அபராதமாக கடந்த அக்.13- ஆம் தேதி அன்று வசூலிக்கப்பட்டது. இதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த ஆயிரத்து 934 பேரிடமிருந்து ரூபாய் 10.25 லட்சமும், சரியான பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த ஆயிரத்து 832 பேரிடமிருந்து ரூபாய் 8.41 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:லியோ படத்திற்கான அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details