சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள திமுக அரசின், முதல் நிதிநிலை அறிக்கைத் தாக்கல் இன்று (ஆக.13) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சாமானிய மக்களின் துயர் துடைக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது சாலைப் பாதுகாப்புக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்து, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தீயணைப்புச் சேவைகள் சட்டம் மாற்றம்
இதுகுறித்து அவர் பேசுகையில், 'தீ விபத்துகள் உள்ளிட்டப் பல்வேறு விபத்துகளால் கணிசமான அளவில் பொருளாதார, மனித இழப்புகள் ஏற்படுகின்றன. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட, தீ விபத்து பாதுகாப்பு செயலாக்க நடவடிக்கைகள் மூலமாக தீ விபத்துகளைத் தடுக்க அரசு பாடுபடும். இதற்காக தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
சாலைப் பாதுகாப்பு, விபத்துகளற்ற தமிழ்நாடு என்னும் இலக்கை நோக்கிச் செல்வதில் அரசு உறுதியாக உள்ளது. சாலை விபத்து, அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது கணிசமான அளவில் குறைந்திருப்பினும், மொத்த எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாகவே உள்ளது.