சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊரக வளர்ச்சித்துறைக்கு நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது தொடர்பான காணொலி 1.27 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள்
'மாநிலத்திலுள்ள அனைத்து 79 ஆயிரத்து 395 குக்கிராமங்களுக்கும், குறைந்தபட்சம் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும், வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்படும்.
தற்போது குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கும், வருகின்ற 2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும். இதற்காக ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.
முழுமையடையாத அனைத்து வீடுகளும் விரைந்து கட்டி முடிக்கப்படுவதை அரசு உறுதி செய்யும். 2021-2022ஆம் ஆண்டில், மொத்தம் 8 ஆயிரத்து 17 கோடியே 41 லட்சம் செலவில், மேலும் 2 லட்சத்து 89 ஆயிரத்து 877 வீடுகள் கட்டப்படும்.
ரூ.3,548 கோடி நிதி ஒதுக்கீடு
கிராமப்புறங்களில் தற்போது வீடு இல்லாத 8 லட்சத்து 3 ஆயிரத்து 924 குடும்பங்களுக்கும், அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போதுள்ள மேற்கூரைக்கான செலவான ரூ. 50 ஆயிரத்துடன், கூடுதலாக மாநில அரசு தரப்பிலிருந்து ரூ. 70 ஆயிரம் வழங்கப்படுவதால், ஒரு வீட்டிற்கான அரசு மானியம் ரூ. 2 லட்சத்து 76 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மிகவும் ஏழை, எளிய பயனாளர்களுக்கு விரைவாக, விலைக் குறைவாக வீடுகள் கட்டுவதற்காக, நவீன, விலை குறைவான கட்டுமானத் தொழில்நுட்பங்களை அரசு ஊக்குவிக்கும். 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில், கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ. 3 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி, நடப்பு ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கு ரூ. 3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்.
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன்
இந்த அரசு, 2021-2022ஆம் ஆண்டில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இந்த திட்டம் குக்கிராம அளவில் நிலவும் அடிப்படை உள்கட்டமைப்பிற்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அறிமுகப்படுத்திய மிகப் புகழ்பெற்ற திட்டம் 'நமக்கு நாமே' திட்டம். இந்த திட்டம் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து, உள்ளூரின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். 2021-2022ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, 2021-2022ஆம் ஆண்டில், 36 ஆயிரத்து 218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 809.79 கோடி செலவில் செயல்படுத்தப்படும். நடப்பு ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன், ரூ. 5 ஆயிரத்து 500 கோடி சிறப்பு கோவிட் கடன் உள்பட, ரூ. 20 ஆயிரம் கோடி கடன் உறுதிசெய்யப்படும்' என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'