சென்னை ஓட்டேரி சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சகோதரிகளான ராஜேஸ்வரி (65), விஜயலட்சுமி (60), மகேஸ்வரி என்ற பிரபாவதி (57) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி கடையில் போட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனர்.
பிரபாவதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபாதையில் இறந்து கிடந்தார். அவரது உடலை தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் ராஜேஸ்வரி, காவல் துறை உதவியுடன் அடக்கம் செய்தார். ஆதரவற்ற நிலையில் அவரது சகோதரிகளான மூதாட்டிகள் இருவரும் சாலையோரம் தங்கி வந்தனர். வீடு இருந்தும் வீட்டில் தங்க இடம் இல்லை என்று மூதாட்டிகள் கூறியதால் காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.
அவர்களது வீட்டுக்குள் குப்பைகள் குவியல் குவியலாக மூட்டை கட்டப்பட்டு இருந்தன. அவற்றை காவலர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த வீட்டில் ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பைகளில் சில்லரைகள் குவிந்து கிடப்பதைக் கண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.