சென்னை: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள விளையாட்டு அரங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " நாளை மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெறவுள்ளது. விளையாட்டு வீரர்கள் உண்ணும் உணவு குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஏற்கனவே பரிசோதனை செய்து வருகின்றனர். 51 உணவகங்களுக்கு ஹைஜீனிக் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு தலையில் முடி கொட்டாமல் இருக்க, தலை கவசம் அணியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
66 சாலையோர உணவகங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடுதியிலும் அவரவர் தேவைக்கு ஏற்ப, ஆங்கிலம் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. இந்திய மருத்துவத் துறை சார்பில் யோகா பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
256 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு குறித்து பணியை மேற்கொள்வர். 15 நாட்களுக்கு இந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கொசு தொந்தரவு இல்லாமல் இருக்க அந்த அந்த சம்பந்தபட்ட பணியில் உள்ளவர்கள் பணியில் ஈடுபடுத்த பட உள்ளனர். விளையாட்டு வீரர்களுக்காக இந்த அரங்கத்தை சுற்றி 30 அவசர ஊர்திகள் தயாராக உள்ளது.